முட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு

ஈழத்தில் பிறந்து, தற்போது பிரான்ஸில் வசித்து வரும் மெலிஞ்சி முத்தனின் மூன்றாம் கவிதைத் தொகுதி 'முட்களின் இடுக்கில்'.

ஈழத்தின் சமகாலத்திய போர்ச் சூழல், உள்முரண்கள், அவர்களுக்கேயான பேச்சுவழக்குச் சொற்கள் புரிந்தவர்களுக்கு ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் எளிமையானவை. காரணம், அவை வெளிப்படையானவை - ஒற்றைப் பரிமாணம் கொண்டவை (சோலைக்கிளி போன்ற விதிவிலக்குகளும் உண்டு). அதே சமயம் தமிழகக் கவிதைகளை விடவும் அவை மண் சார்ந்தவை மனிதம் சார்ந்தவை நம் கற்பனைகளை மீறிய பெரும் துக்கம் சார்ந்தவை. மெலிஞ்சி முத்தனின் 'முட்களின் இடுக்கில்' தொகுப்பிலுள்ள கவிதைகளும் இத்தகையவையே. அதே சமயம் விதிவிலக்காகப் பன்முகத்தன்மையும் சூசகமான வெளிப்பாடும் கொண்ட சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. இத்தகைய கவிதைகளே பெரும்பாலான ஈழத்துக் கவிஞர்களிடமிருந்து மெலிஞ்சி முத்தன் தனித்து நிற்பதை நுட்பமாகவும் உணர்த்துகின்றன.

"அடர்த்தியான கருப்பொருட்களைச் சுருக்கி இறுக்கமான படிமங்களை முன்வைக்கும் 'வாழ்வின் ருசி' எனும் கவிதை எடுத்த எடுப்பில் ஆதி மனிதனிடமிருந்த இயல்பின்பத்தை இழந்த கிளர்ச்சியையும் அக்கிளர்ச்சிக்கு இலக்காகும் எதிரியையும் ஒரு வகை அச்சத்துடன் பூடகமாக வெளிக் கொணர்கிறது" என்கிறார் அணிந் துரையில் வாசுதேவன். வாழ்வின் ருசி என்பதற்கு மேலும் பல விதமான அனுபவ தளங்களுக்கும் இட்டுச் செல்லும் கவிதை இதுவென இன்னொரு வாசகர் உணரக்கூடும். அத்தகைய சூசகமான வெளிப்பாடு கொண்ட கவிதை இது.

உள்நாட்டு யுத்தம் திணித்த வன்கொடுமைகள், அழிவுகள், மரணத்தினூடான வாழ்க்கையிலும் துளிர்விடும் நம்பிக்கைகள், புலம் பெயர்ந்த வாழ்வில் முகமிழந்த - சுயமிழந்த அவலங்கள், என்றேனும் பிறந்த மண்ணில் கால் பதியும் என்னும் எதிர்பார்ப்பு, கனவுகளே வாழ்வாகிப்போன துயரம், வாரிசுகளின் எதிர்காலம் குறித்த கவலை என்றாகிப்போன இன்றைய ஈழத்து -புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து -கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் பொது அம்சங்களே மெலிஞ்சி முத்தனின் கவிதைகளிலும் நாம் காணக்கூடியவை. இந்த அனுபவங்கள், உணர்வுகள் எந்த அளவில் கவிதைகளாகி இருக்கின்றன, கவிஞரின் துக்கங்கள் அவருக்கே யானவையாக மட்டுமில்லாமல் அழகியல் சார்ந்த கலை வெளிப்பாடுகளாகி, மனிதர்களின் துக்கங்களாகப் பொதுமையடைந்து வாசக மனங்களுள் அதிர்வை ஏற்படுத்துகின்றனவா என்பதைப் பொறுத்தே அவற்றின் இலக்கியப் பெறுமானம் நிர்ணயம் பெறும். இவ்வகையிலேயே மெலிஞ்சி முத்தனின் கவிதைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஓர் உதாரணம் பார்ப்போம்.

'நதியின் கரைகளில்' என்ற கவிதை.
'ஒரு இனத்தின்
வியர்த்துப் போன வரலாறு'

கவிஞனோடு இழுபட்டு, பிரான்ஸ் தேசத்தின் நதிகளில் கால் அலசி, கடந்து வந்த பாலைவனங்களின் கொப்புளங்களில் தண்மை பாய்ச்சி, மரங்களுக்கெல்லாம் தன் மரத்துப்போன மனத்தைப் பகிரங்கப் படுத்தி, வெப்பம் பற்றி வியாக்கியானம் செய்து, குழந்தைகளின் பிணங்கள் மற்றும் பல்லாண்டுப் பிணங்களையெல்லாம் அள்ளி வந்து உலகின் பார்வையில் போட்டு, உலகத்தின் பாராமுகத்தின் கோரங்கள் இவை என்கிறது. பின்,

'அராஜகத்தின் முகத்தில் காறியுமிழ்கிறது

நான்கு நிற மனிதருக்குள்ளும்
நிறமற்ற மனிதர் தேடி
நடந்து போகிறது நதியின் கரைகளில்'

ஆனால் அதன் துரதிர்ஷ்டம்,

'அதோ நூலகம்/ எரித்தவர்களும்/
தங்கள் சாம்பல்/ நிறக்கால்களை/
அலசிக் கொண்டிருக்கிறார்கள்/
இந்த நதியின் கரைகளில் / நின்று.'
(பக். 19)

கவிதை முடிகிறது. நதிக்கரையோரங்களில்தானே மனித நாகரிகம் வளர்ந்து வந்ததாக வரலாறு. அநாகரிகமும்கூட என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது. அர்த்தத் தளத்திலிருந்து அனுபவத் தளத்துக்கு விரிகிறது.

மெலிஞ்சி முத்தனின் கவிதை மொழி எளிமையானது. இயல்பானது. அதனால் சரளமானது. கவித்துவ மெருகேற்றும் வித்தையெதையும் அவர் 'சிரம'ப்பட்டு மேற்கொள்ளவில்லை. பல கவிதைகளிலும் நவீனக் கவிதைக்கேயான கச்சிதமான உருவ அமைதியும் இல்லை. ஆனால் ஜீவன் இருக்கிறது; அதனால் இவை கவிதைகளாகியிருக்கின்றன.

அதே சமயம், ஈழத்துக் கவிஞர்கள் பலரையும் போலவே இவரது சில கவிதைகளிலும் இடம் பெறும் நீளமான வரிகளும் வசனப் பகுதிகளும் சலிப்பூட்ட வைக்கின்றன.

தொகுப்பிலுள்ள 41 கவிதைகளில் 'வாழ்வின் ருசி', 'பட்டி மாடுகள்', 'மழை', 'நதியின் கரைகளில்', 'சகுனக் குருவி', 'இந்த இரவும், ஒரு கவிதையும்' உள்படப் பத்துப் பன்னிரண்டு கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவதே, தமிழ்ச் சூழலில் இத் தொகுப்பு கவனத்துக்குரியது என்பதை உணர்த்தும்.

புலம் பெயர்ந்த தமிழர் நடத்தும் இதழ்களில் 2003-2005 காலகட்டத்தில் வெளிவந்த இக்கவிதைகளை ஸ்ரீபாரதி பதிப்பகத்தார் (பாரிஸ்) பொருத்தமான கோட்டோ வியங்களுடன் சிறப்பாக வெளியிட்டுள்ளனர்.

வெளியீடு:
ஸ்ரீபாரதி பதிப்பகம்
பாரிஸ் (18, rue cail, 75010 Paris),
தொ.பே.: 0033 (0) 1 42 05 4604
email: Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!.
பக். 76,
விலை குறிப்பிடப்படவில்லை


Drucken   E-Mail

Related Articles