யுகங்கள் கணக்கல்ல - கவிதா

அரை குறையாக வாசித்து, இடையிலே விட்டு விட்ட கவிதாவின் (Cavitha Cegu) `யுகங்கள் கணக்கல்ல´ சிறுகதைத் தொகுப்பை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கும் போதான மனநிலையும் ஒரு படைப்பின் தரத்தையும், கனத்தையும் நிர்ணயிக்குமோ என்று எண்ணும் படியாக முதலில் நான் வாசித்த போதிருந்ததையும் விட வேறுவிதமான பரிமாணங்களை அக்கதைகளில் கண்டேன்.

1969-1970 இல் எழுதப்பட்ட சிறுகதைளை இன்று வாசிக்கக் கூடிய சாத்தியம் மகிழ்விற்குரியது. அவை அன்றைய ஒரு பெண்ணால் எழுதப்பட்ட கதைகளாக இருப்பது தனித்துவமானதும் கூட.

1960-1970 களில் கவிதா எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார்!
வியப்பாக இருக்கிறது.

பாலியல்கல்வியின் அவசியம் பற்றி `மானிடவர்க்கென்று பேச்சுப்படின்´ என்ற கதையில் பேசுகிறார். இன்றைக்குக் கூட அதை எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்று கவிதா அது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முதல் குருதிவெளியேற்றத்தைப் பற்றியே ஒரு பெண்குழந்தைக்கு விளக்கமளிக்கத் திராரணியற்ற சமூகச்சூழல்தான் அன்று இருந்தது. அந்த நேரத்தில் கவிதாவின் சிந்தனை இப்படி விரிந்திருக்கிறது. வியந்து நோக்காமல் இருக்க முடியுமா?

இப்போது நான் "செக்ஸ் எஜூகேஷன்' நம் நாட்டில் இல்லாமையை ஒரு பெரிய குறையாக உணர ஆரம்பித்தேன். அரிஸ்டாட்டில் காலம் தொடக்கம் உலகம் பெற்று வந்திருக்கிற அறிவை எல்லாம் ஒருவனின் மூளைக்குள் திணிப்பதுடன் கல்வியின் வேலை முடிந்து விடுகிறதா? இந்தச் சிக்கலான சமுதாயத்தில் தன்னைப் பொருத்தப்பாடுள்ளவகை ஆக்கிக்கொண்டு வாழ வழி வகுப்பது அதன் வேலை இல்லையோ...


என்று ஆதங்கப் பட்டுள்ளார்.

இவரது ஒவ்வொரு கதையும் அன்றைய கால வாழ்க்கையை, குடும்ப அமைப்பை, காதலை, குடும்ப உறவை, கல்வியை, மேட்டுக்குடித்தனங்களை... என்று ஒவ்வொரு விதமான ஆனால் வழமையான விடயங்களையே பேசினாலும் எல்லாவற்றிலுமே ஒரு முற்போக்குத்தனமான கூரிய சிந்தனை சுடர் விடுவதை அவதானிக்க முடிகிறது. சமுதாயக் கோட்பாடுகள், அது கொண்டிருக்கும் பிடிவாதங்கள்... போன்றவற்றின் மீதான இவரது ஆதங்கம் நிறைந்த விமர்சனங்கள் அன்றைய சூழலிலும் இவருள் எழுந்த ஆரோக்கியமான விசனங்களைப் படம் போட்டுக் காட்டுகின்றன.

இவரது கதைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.

ஒரு ஜன்னலினூடு, ஒரே நேரத்தில் பார்க்கும் போது கணவன் ஒரு காட்சியையும், மனைவி இன்னொரு காட்சியையும் காணுவார்களாயின் அவர்கள் மனம் ஒன்றித்து வாழ்தலில் உள்ள சிக்கலை ஒரே ஜன்னலினூடே... என்ற கதையில் சொல்கிறார். இன்னும் பல.

அன்று துணிவாக இத்தனை விடயங்களைப் பேசிய கவிதா பின்னர் ஏன் மௌனித்தார்?

- சந்திரவதனா
18.09.2018


Quelle - Facebook

Related Articles