CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை, Umaiyaal, Bookநான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள் ஏற்கெனவே எனக்கு பரிச்சயமானவைதான். வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து சற்று மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களில் ஒருவித வசீகரம் இருக்கிறது. நேர்மை இருக்கிறது. பெண்களை மதிக்கும் தன்மை இருக்கிறது. பெண்களின் மீதான கரிசனை இருக்கிறது.

இந்த உமையாழ் என்ற பெயரும் பெண்கள் பற்றிய உமையாழின் பல்விதமான பதிவுகளும் இவரொரு பெண்ணா ஆணா என்ற குழப்பத்தையும் அவ்வப்போது என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. எதுவாயினும் எவராயினும் என்ன? உமையாழின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தன. ஒரு பொழுதில் ஒன்று விடாமல் படித்துத் தீர்த்தேன்.

அந்த வகையில் சில ஆண்டுகள் கழித்து என் கரம் கிட்டிய உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` நூலை பெரும் ஆவலுடன் கைகளில் எடுத்தேன்.

அட்டைப்படம் ஆர்ப்பட்டமில்லாத, அமைதியானதொரு நீரோவியம். அதை வரைந்தவர் பற்றியோ, வடிவமைத்தவர் பற்றியோ எந்த ஒரு குறிப்பையும் புத்தகத்தில் நான் காணவில்லை. ஒருவேளை றஷ்மியாக இருக்கலாம்.

பின்னட்டையில் உமையாழின் படத்துடன்
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. கொஞ்ச நாட்களாக என்னுடைய தனிப்பட்ட பாவனையில் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தமிழை, எழுதிக் கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது. அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா! போலவே அரேபிய பாலைவனங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்! இப்போது, நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா! அல்லது நான் ‘வேரோடி’ எனது கரையை போய்ச் சேர்ந்து விட வேண்டுமா? கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்! அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.
என்ற உமையாழின் மனவரிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன.

உள்ளே அர்த்தங்களிலிருந்தான விடுதலை என்ற தலைப்பில் நூல் பற்றிய முகவுரையோ, அணிந்துரையோ அன்றில் நன்றியுரையோ ஏதோ ஒன்று உமையாழினால் எழுதப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நான் முகவுரை, அணிந்துரை, பதிப்புரை... போன்றவைகளை கடைசியாகவே படிப்பேன். அதனால் அதைக் கடந்து நூலைப் படிக்கத் தொடங்கினேன். உள்ளே சிறியதும் பெரியதுமாக ஒன்பது கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.

பிரித்தானியாவில் குடியேற முன்னர் ஆறாண்டு காலம் அரேபியாவில் வாழ்ந்த உமையாழ் தான் வாழ்ந்த அந்தச் சவுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சில வருடங்களின் முன் தொடராக இணையத்தில் எழுதினார். அந்தக் கதையும் இந்த ஒன்பது கதைகளில் ஒன்றாக ´சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை` என்ற தலைப்பில் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சவுதியில், றியாத்தின் பழம்பெரும் நகரமான பத்தாஃ ஐக் களமாகக் கொண்ட இந்தச் ´சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை` ஒரு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய கதை.

சவுதிக்கு வேலைக்கெனச் செல்பவர்கள் அனுபவித்த, அனுபவிக்கும் கொடுமைகள், அங்கு நிறைவேற்றப்படும் தண்டனைகள் போன்றவற்றை வெறும் செய்திகளாகவும் காட்சிகளாகவும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் `ஏன் இவர்கள் தெரிந்து கொண்டும் மீண்டும் மீண்டுமாய் அங்கு செல்கிறார்கள்?´ `இப்படியான தண்டனைகள் கிடைக்கும் என்று அறிந்தும் ஏன் குறிப்பிட்ட சில தவறுகளைச் செய்யத் துணிகிறார்கள்?´ என எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். எனது மனதிலுள்ள ஆதங்கம் நிறைந்த இந்தக் கேள்விகளுக்கு ஓரளவேனும் விடை தரக்கூடிய விதமாக இக்கதை அமைந்துள்ளது.

வேலை செய்து பொருளீட்டி தனது குடும்பத்தை உயர்த்தி விட வேண்டும் என்ற நினைப்புடன் , ஐந்து மாதக் கர்ப்பிணியான தனது மனைவியை வங்காளதேசத்தில் விட்டுவிட்டுச் சென்று சவுதியில் 23 வருடங்களாக தனிமையில் வாழும் 48வயது நிரம்பிய ஒரு மனிதன், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூடி வரும் போது தான் அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு விடுகிறான். அதனால் வந்த வினை. மரணதண்டனை. கதை இப்படித்தான் தொடங்குகிறது.

தலையை மூடியிருந்த கனமான கம்பளித்துணியில் இருந்து மூத்திரவாடையை அவன் நுகர்ந்தான். நீரேறிய கம்பளியில் மூத்திரவாடைதான் அடிக்கும். அந்த ஜூன் மாதத்தின் பட்டப்பகலின் மரணவெயிலில் கம்பளியின் வெளிப்புறத்தே இருந்த நீரெல்லாம் நொடியில் ஆவியாகி இருக்க வேண்டும். ஆனாலும் உள்ளே இன்னம் ஈரலிப்பு இருக்கத்தான் செய்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு முறை தலையில் கோணிப்பையைக் கவிழ்த்தது போல இருந்த அந்தக் கம்பளியின் மீது தண்ணீரை யாரோ ஊற்றி, ஈரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்… யாருக்குத்தான் நிறுத்த மனம் வரும்?

ஏற்கெனவே இந்தக் கதையின் முற்பகுதியை இணையத்தில் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் முடிவை அறிந்து விடும் ஆர்வமும் கதையின் போக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றன.

எதிர்பார்ப்பு சற்றும் வீண்போகவில்லை. கற்பனையில் கூடத் தெரிந்திராத சவுதியின் அந்த நகரத்தையும், வீதிகளையும், சந்து பொந்துகளையும், அங்கு வேலை செய்து பொருளீட்ட எனச் செல்லும் எம்மவர்களின் வாழ்க்கை முறைமைகளையும், அவர்கள் அங்கு உண்ணும் உணவுகளையும், மரணதண்டனை விதிக்கப்பட்டு, தலை துண்டிக்கப் படுவதற்காக தலையை மூடிக்கட்டியபடி முட்டுக்காலில் இருக்கும் அந்த மனிதனோடு சேர்த்து மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.

அந்த நுணுப்பமான, அவதானிப்புடனான கதைசொல்லும் முறை அருமை.

ஆனாலும் ஒரு கேள்வி இப்போதும் என்னிடம் உள்ளது. `மரணதண்டனைக்காக தலையை மூடிக் கட்டப்பட்ட ஒருவனின் உணர்வுகளையும் உபாதைகளையும் எப்படி உமையாழ் எழுதினார்´ என்பதே அது. பெரும்பாலும் உமையாழ் வெறும் கற்பனையிலோ எழுந்த மானத்திலோ எல்லாவற்றையும் எழுதி விடுபவர் அல்ல. கூடிய பங்கு, தான் எழுதும் அல்லது எழுதப் போகும் விடயங்கள் பற்றி அவர் முற்கூட்டியே வாசித்தோ, அன்றில் அது சம்மந்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடியோ அல்லது அதை, தானே நேரே பார்த்து விட்டோதான் எழுதுவார். (இப்படியொரு கணிப்பு என்னிடம் உண்டு ) ஆனால் தலைதுண்டிக்கப் படுவதற்காக, அதுவும் சவுதியில், தலையை மூடிக் கட்டியபடி முட்டுக்காலில் இருக்கும் ஒருவனின் உணர்வுகள், அந்தக் கொடுமையின் தீவிரம்... போன்றவைகளை உமையாழ் அழகாகச் சொல்லியுள்ளார். உணர்வோடு சொல்லியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இந்தக் கதையை விட இன்னும் நன்றாக அமைந்த கதை `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ஒன்பது கதைகளில் மிகநேர்த்தியாக அமைந்த கதையும் கூட இது.

உளவியல் தாக்கம் நிறைந்த, Bar இல் நடனமாடும் ஒரு பெண்ணைப் பற்றிய இக்கதை Bar க்குள்ளேயே நகர்கிறது. உமையாழின் எழுத்துக்களில் ஒரு நேர்மை இருக்கிறது. பெண்களை மதிக்கும் தன்மை இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அது இந்தக் கதையிலும் தெரிகிறது. எத்தனையோ, பெரியஎழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் கதைகளை வாசித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்கள் இப்படியான பெண்களைச் சித்தரிக்கும் போது அவர்களின் வார்த்தைகளில் ஏளனம் தொக்கி நிற்கும், அலட்சியமும் குற்றச்சாட்டும் தொனிக்கும், கூடவே அவள் கூடாதவள் என்ற அழுத்தம் காட்டப்படும். ஆனால் உமையாழின் இந்தக் கதையில் அந்தப் பெண்ணின் மீதான கரிசனம்தான் தெரிகிறது. அவள் ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாள்? அவளுக்கு உளவியல் தாக்கம் ஏற்படுவதற்கும், அவள் இப்படி நடந்து கொள்வதற்குமான காரணங்கள் என்ன? என்பதையெல்லாம் அவர் கதையின் அழகியலில் எந்தக் குறையும் ஏற்பட்டு விடாமல் சொல்லி விடுகிறார். சின்ன வயதில் பெற்றோரின் ஒற்றுமையின்மை, அதன் பின் அப்பாவின் நண்பர்களில் தொடங்கி அக்காவின் கணவர் வரையான சுற்றியிருந்த ஆண்களின் அணுகல் முறை, அவளைப் பயன்படுத்திய முறை, அக்காள்மாரின் புரிந்துணர்வில்லாத தன்மை… எல்லாவற்றையுமே ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பார்த்துச் சொல்வது போலச் சொல்வது இன்னும் சிறப்பாக உள்ளது.

இப்படியான பொதுவெளிகளில் தமது உடலின் நளினங்களைக் கொண்டு தொழில் புரியும் பெண்களிடமும் தமக்கென ஒரு கட்டுப்பாடு, எல்லை எல்லாம் உண்டு. இதை ஆண்கள் மட்டுமல்ல. பெண்கள் கூடப் பொதுவாகப் புரிந்து கொள்வதில்லை. அந்தக் கட்டுப்பாட்டை உமையாழ் இப்படிச் சொல்கிறார்.
அவளுக்கென ஒரு திமிர் இருந்தது. அழகான திமிர். அவள் அனுமதியாது யாரையும் அருகில் அண்டவிடாத திமிர். அது அவளை ஒரு அரண் போல சுற்றி இருப்பதாக இப்போது நான் கற்பனை செய்து பார்க்கிறேன். உண்மைதான், அந்தத் திமிர் அவளை அத்தனை ஆண்களுக்கு மத்தியிலும் கம்பீரமானவளாய்க் காட்டிற்று. அந்தக் கம்பீரம் அவளுக்கு வேண்டியதை அவளே தேர்வு செய்துகொள்ளத் தேவையான துணிவைக் கொடுத்திருந்தது. அதன் வழியே அன்றைக்குத் தன்னுடன் ஆட வேண்டியவனை அவளே தேர்வு செய்தாள்.

இது மட்டுமா? போகிற போக்கில் உமையாழ் கவித்துவமாக எதையாவது சொல்லிச் செல்வார். இந்தக் கதையிலே ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்
எவ்வளவு விசித்திரமானது இந்த மனது
தனக்குத் தேவையானதை மட்டும் பத்திரப் படுத்திக் கொள்கிறதோ!
பாலை, கள்ளி வளர்ப்பதில்லையா, அப்படி

இதே கதையில் இன்னொரு இடத்தில்
அந்த இரவு மிக ரம்மியமானது. வானத்தில் நட்சத்திரங்களே இல்லாத இரவு எங்கனம் ரம்மியமானதாக இருக்க முடியும்! முடியும். தேவதைகளுடன் நீங்கள் வீதி உலாப் போகிற போது இரவை ரம்மியமானதாக்க நட்சத்திரங்கள் தேவையில்லை. Cass ஒரு தேவதை. நாங்கள் நடந்துகொண்டே இருந்தோம். காலத்தைக் கலைத்து, இரவை மிகைத்த அமைதி எங்களில் கொட்டிக்கிடந்தது. பேசிக்கொள்வதைவிட அமைதி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது.

இன்னுமொரு இடத்தில் cass எழுதி வைத்த சின்னத் துண்டுக் காகிதத்துக்காக அவர் எழுதியது
படித்து முடிக்கையில் ஒரு கணம் என்னில் தோன்றி மறைந்த புன்னகையின் துளிர்ப்பு இந்தக் கணம் வரை என்னில் ஈரமாகவே இருக்கக் காண்கிறேன். ஏதோ ஒரு தூர தேசத்தில் இருந்து பறந்து வந்த ஒரு வண்ணப்பறவை, மழைக்கு என் கூட்டில் அடைந்து, இறக்கை விரித்து, உடல் சிலுப்பியதில் தெறித்த நீர்த் திவலைகள் என் பழங்கூட்டின் மூலைமுடுக்கெல்லாம் வண்ணங்கூட்டி இருந்தது. ஏய் வண்ணப் பறவையே, என் கூடவே தங்கிவிடேன் என மனது முணுமுணுத்தது.

இப்படியாக, சோகமான கதைகளைக் கூட உமையாழால் ரம்மியமாக எழுத முடிகிறது.

அவ்வப்போது ஏதாவது பயனுள்ள தகவல்களையோ அன்றில் நாம் மறந்து போன விடயங்களையோ கூட கதைகளில் ஆங்காங்கே சொல்லி விடுகிறார். உதாரணமாக அவளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏதற்காகச் சிரிக்கிறாள், எதற்காக அழுகிறாள் என்பதெல்லாம் புதிராக இருந்தது. அழுத்தமாகச் சொல்லவேண்டியதை சிரிச்சிட்டு சொல்கிறாள். சிரிக்க வேண்டிய இடத்தில் கோவப்படுகிறாள். கோவப்பட வேண்டிய இடத்தில் அமைதியாக இருக்கிறாள். இப்போதும் அவளது முகம் மாறி இருந்தது. அவள் இறுக்கமாக இருந்தாள். மூஞ்சி உர்ர் என்றிருந்தது. இப்போ என்னாச்சு? தெரியவில்லை. அது அப்படித்தான். அவள் ஒரு வாத்து போல. நீர்ப்பரப்புக்கு மேலே ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதாகத் தெரியும். ஆனால் நீருக்கடியில் வாத்தின் கால்கள் எப்போதும் பரபரத்துக்கொண்டிருக்கும். அப்படி.

இப்படித்தான் உமையாழின் எழுத்துக்கள். வாத்து பற்றிய இந்தத் தத்துவம் என்றோ கேள்விப்பட்டு எப்போதோ மறந்து போன ஒன்று. இப்போது ஞாபகப் படுத்தியுள்ளார். ஒவ்வொரு கதையிலும் இப்படி ஏதோ ஒன்றைப் பயனாகச் சொல்லி விடுகிறார்.

இவரது இந்த ஒன்பது கதைகளில் அடுத்து என்னைக் கவர்ந்த கதை அரூபம். அரூபம் கதையை நான் ஏற்கெனவே இணையத்தளத்தில் வாசித்து ஒன்றுமே புரியாமல் குழம்பி, ஏன்தான் இப்படி யாருக்கும் விளங்காமல் எழுதுகிறார்களோ என்று யோசித்தேன். அதன் பின் உமையாழின் எழுத்துக்களை வாசிப்பதையே குறைத்திருந்தேன். சிலர், யாருக்கும் விளங்காமல் எழுதினால்தான் அது இலக்கியம் என்று நினைக்கிறார்கள். அப்படியொரு எண்ணம் உமையாழுக்கும் வந்து விட்டதோ என்று கூட விசனப் பட்டேன். ஆனால் அந்தக் கதையை இந்த நூலில் கண்ட போது மீண்டுமொரு முறை வாசித்துப் பார்ப்போம் என்ற எண்ணம் வந்தது.

கதையை உமையாழ் தன்னிலையில் இருந்து எழுதுகிறார். அதே நேரம் இணையவழி முகநூலினூடாக அறிமுகமான உமையாழ் என்றொரு முகம் தெரியாத நண்பனை அபர்டீனில், ஒரு கோப்பிக்கடையில் சந்திக்கிறார். அங்குதான் பிரச்சனையும் குழப்பமும் ஆரம்பமாகிறது. இம்முறை வாசிக்கும் போது `கதாசிரியரின் பெயர் உமையாழ் என்பதை மறந்து போ` என என் மனசுக்குச் சொல்லி விட்டு வாசிக்கத் தொடங்கினேன். அவ்வப்போது மனசு குழம்பி, யார் உமையாழ் என்று விழித்தாலும்... கதையை வாசித்து முடித்த போது பிரமிப்பாக இருந்தது. அருமையான கற்பனை. கற்பனையா? உண்மையென்று கூடக் கொள்ளலாம். தானே தள்ளி நின்று தன்னையே பார்ப்பது போலான, தன்னோடு விவாதிப்பது போலான கதை. அதன் பின்தான் தலைப்பு அரூபம் என்பதையும் அதன் பொருளையும் கவனித்தேன்.

இக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் இப்படி வருகிறது
அவனை உற்று நோக்கினேன். அவன் ஆழ்கடலைப் போல அமைதியாக இருந்தான். முழுமதி போல தெளிவற்றிருந்த அவனது முகத்தில் இருந்து எந்தவொன்றையும் என்னால் கணிக்க முடியவில்லை. “யாரும் யாரையும் தேடி அலைய வேண்டியதில்லை. இலக்கியம் மனிதர்களை இலகுவில் அடையாளப்படுத்தி இணைத்துவிடுகிறது. அதைத்தான் எஸ்.ரா ‘எழுத்து தன் நீண்ட பயணத்தில் யாவரையும் ஒன்றிணைத்து விடுகிறது’என்று எழுதி இருப்பார்”

எனக்கு எரிச்சலாக வந்தது. ´உமையாழ் எப்போதும் ஏன் யாராவது ஒரு எழுத்தாளரை உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறார்?`

அடுத்த வரியில் அதே கேள்வி அவரது மனசுக்குள்ளும் எழுகிறது.
எதற்காக எப்போதும் ஏதாவதொரு எழுத்தாளரை மேற்கோள் காட்டிக்கொண்டே இருக்கிறான்! என்று அவர் தன்னைச் சந்திக்க வந்த உமையாழைப் பற்றி தனக்குள் கேட்கிறார்.

இப்படித்தான் இந்தக் கதை , நிறையக் கேள்விகள். உதாரணங்களைக் காட்டுவதற்காக அவர் படித்த, ரசித்த நூல்களை எழுதிய எழுத்தாளர்கள், இலக்கிய உரையாடல்கள்… என்று நகர்கிறது. கதை எழுதிய அந்த உத்தி நன்றாக உள்ளது.

இந்த மூன்று கதைகளையும் போலவே இலண்டனைக் களமாகக் கொண்டு எழுதப்பெற்ற `வேரோடி´ கதையும் குறிப்பிடத்தக்கதொரு கதை. ஆனாலும் இக்கதையை முதற்தடவை வாசித்த போது இவ்வளவுதானா, இதெல்லாம் இங்கு சகயம்தானே என்றுதான் மனதில் தோன்றியது. காரணம்: கதையில் வரும் மிஸஸ் தொம்சனுக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளார்கள். கணவர் இறந்தபின் மீண்டுமொரு ஆணுடன் சேர்ந்த வாழ்வு. அதுவும் ஒரு பொழுதில் இல்லாமல் போகிறது. ஐரோப்பிய வாழ்க்கையில் சேர்தலும் பிரிதலும், திருமணவாழ்க்கையும் முறிவும் ஆரம்ப காலங்களில் பெரும் அதிர்வைத் தருவனவாகத்தான் இருந்தன. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்தான இன்றைய நிலையில் அது ஒரு பெரிய விடயமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையை மீண்டுமொருமுறை வாசித்த போது அது வேறு பரிமாணங்களைக் காட்டியது. இந்தக் கதையையும் உமையாழ் தன்னிலையில் இருந்தே எழுதுகிறார். ஐரோப்பியப் பெண்ணான மிஸஸ் தொம்சனின் ஐரோப்பிய வாழ்க்கையோடு கிட்டத்தட்ட அதே வயதையொத்த ஊரில் வாழும் தனது பாட்டியின் வாழ்வையும் கதையினூடு சொல்லிக் கொண்டு போகிறார்.

புதிதாக இலண்டனுக்கு வந்த அவரது மனைவிக்கு மிஸஸ் தொம்சனின் இந்த வாழ்க்கை முறை ஆச்சரியமான, மனதால் ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயமாகவே உள்ளது. இதே மனநிலை இங்கு பலகாலம் வாழ்பவர்களுக்குக் கூட உள்ளது. இந்த வாழ்வை எம்மவர்களில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஊரிலிருக்கும் அம்மம்மா கணவன் இல்லாத போதிலும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமே உலகம் என்று வாழ்வதையும், ஐரோப்பியப்பெண்ணான மிஸஸ் தொம்சன் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்த போதும் தனித்து, தனது கடைசி கால வாழ்க்கையை ஒரு முதியோர் இல்லத்தில் பொருத்திக் கொண்டதையும் அழகாகச் சொல்லியுள்ளார் உமையாழ்.

கூடவே இன்னொரு விடயத்தையும் இக்கதையில் சொல்கிறார்.
ஒரு அரசமரத்தில எம்பட்டு கிளைதான் இருந்தாலும், அதுல ஒன்டு உடைச்சா அது பூப்பத, காய்ப்பத இருவத்தொரு நாள் நிறுத்திப் போடுமாம். எங்கு வாப்பா சொல்லுவார். அதுவும் நீ தலைச்சாங் கிள.இந்த அரச மரத்திர ஆணிவேருயா. நீயே நகர்ந்திட்டைனா எப்படியா?

இதை அந்த அம்மம்மா அவரது பாஷையில் உம்மம்மா சொல்கிறா. இந்த அரசமரக் கதை எனக்குப் புதிது.

அடுத்து ´ஊர்க்கத`. உமையாழ், தான் பிறந்த, வாழ்ந்த இடமான கிழக்கிலங்கையின் ஒரு ஊரையும், அங்கு வாழ் மக்களின் இயல்புகளையும், பழக்கவழக்கங்களையும் இக்கதையினூடு எம்முன் விரிக்கிறார். முந்தைய காலத்தில், அனேகமான எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் என்றோ அல்லது ஒரு ஊரில் ஒரு இராணி இருந்தாள் என்றோ தான் தொடங்கியிருக்கின்றன. இங்கே இந்தக் கதை அப்படித் தொடங்கவில்லை. மூன்றாவதாகவும் பிறந்த பெண்குழந்தையை ஏற்கெனவே தோண்டியிருக்கும் குழியில் போட வேண்டிய சடங்கை தந்தையே செய்ய வேண்டும்… என்றுதான் தொடங்குகிறது.

கி.மு நான்காம் நூற்றாண்டுக் கதையை மடியில் படுத்திருக்கும் 13-14 வயது நிரம்பிய உமையாழுக்கு குறிப்பிட்டது போலவே அவரது ஊர் மொழியில் சாலியாப் பெரியம்மா சொல்லத் தொடங்குகிறா. (கதையை தன்னிலையில் இருந்து உமையாழ் எழுதியதால் அந்தச் சிறுவன் உமையாழ்தான் என மனம் எண்ணிக் கொண்டது) சாலியாப் பெரியம்மா அந்தக் கதையைச் சொல்லி முடிக்க முன்னமே, சாலியாப் பெரியம்மாவைப் பற்றிய விவரணங்களோடு, இஸ்லாமிய மதத்தவர்கள் வாழும் ஒரு ஊரின் கதை, அதன் பேச்சு வழக்கு, அங்கு வாழ் மக்களின் வாழ்க்கைமுறை... என்று பலவிடயங்களையும் சொல்லி விடுகிறார். முழுக்க முழுக்க வட்டார வழக்கு. படித்து முடித்த பின் அந்தக் குடும்பத்தோடு வாழ்ந்தது போன்றதொரு உணர்வு. அத்தனை நுணுப்பமாக ஒவ்வொரு விடயத்தையும் சிலாகித்துச் சொல்கிறார்.

இந்தக் கதையில் (23ம்பக்கத்தில்) பாலுறவு பற்றிய சில விடயங்கள் பச்சையாகவே சொல்லப் பட்டுள்ளன. அது தேவைதானா? சில விடயங்களை நாசூக்காகச் சொல்லத் தெரிவது எழுத்தாளனுக்குரிய பண்புகளில் ஒன்று என்றே நான் கருதுகிறேன். அப்படி எழுதியது அந்தக் கதைக்கு கரும்புள்ளி குத்தியது போலவே எனக்குத் தெரிந்தது.

`நின்கூடுகை´ ஓரின அல்லது ஒருபால் உறவு பற்றிய கதை. இருபெண்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனாலும் இதில் ஒரு பெண் ஆண்களுடனும் உறவு வைத்திருக்கிறாள். கதையில் வேறு நல்ல விடயங்கள் இருந்தாலும் இந்தப் பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவைப் பற்றிய விவரணங்கள் சற்று அதீதமாகி சலிப்பை ஏற்படுத்தத் தயாராக உள்ளன. அதே நேரம் இந்தக் கதைக்குள்ளே இன்னொரு கதை வருகிறது. அது கொஞ்சம் இலக்கியம், இன்னும் கொஞ்சம் பெண்கள் மீதான வன்முறை, நியாயமின்மையான சமூகக் கோட்பாடுகள் என்று நல்ல விடயங்களை அழகாகப் பேசுகிறது.

`காதுப்பூ´ சவுதியின் மக்கா நகரில் அநாதரவாக இறந்து போய்விட்ட எம்மவர் ஒருவரின் கதை. கதை சவுதியில் தொடங்கி சவுதியில் முடிந்தாலும் அவரது ஊர் வாழ்க்கைதான் கதையில் சித்தரிக்கப் படுகிறது. ஊரிலே பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த அவர் சுதந்திரப்பிரியர். வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதும் மணவாழ்வு அவருக்குச் சரவரவில்லை. விட்டேற்றியாகத் திரிந்த ஒரு பொழுதில் ஒரு விலைமாதுவுடன் தொடர்பு வருகிறது. அந்த விலைமாதுவைத்தான் அவர் நெஞ்சிருத்தி வைத்திருக்கின்றார். ஆனாலும் மக்காவில் இருந்து அந்தப் பெண்ணிடம் திரும்பி வராமலே இறந்து போய் விடுகிறார். ஒரு வித சோகமான இந்தக் கதையிலும் கிழக்கிலங்கையின் இன்னொரு சமூகப் பின்னணியிலான வாழ்க்கை முறை சித்தரிக்கப் பட்டுள்ளது.

காதுப்பூ என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தோடாக இருக்கலாமோ?

`மேய்ப்பர்´ 1989-1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப் பட்டதை மேலோட்டமாகவும், 2008 மார்ச்சில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையைக் கொஞ்சம் விரிவாகவும் சொல்கிறது. ஆனாலும் அந்த வன்முறை பற்றிய விவரணம் அந்தளவு தூரம் உணர்வுபூர்வமாக அமையவில்லை.

கடைசிக்கதை ´பிறழ்வு`. பெண்ணின் உணர்வுகளோடு ஆணாக பிறந்து விட்ட ஒருவனின் கதை. அவனது உணர்வுகள் மதிக்கப்படாது அவனது தந்தையாலேயே அவன் மிதிக்கப்பட்டதனால் ஏற்பட்ட மனஅழுத்தமும் அதனாலான மனப்பிறழ்வும் என்று ஒரு காத்திரமான கருவைக் கொண்ட கதை. ஆனாலும் அதன் வீரியம் முழுமையாக வெளிப்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதியிருக்கலாம்.

இன்னுமொரு குறை ஊருப்பட்ட எழுத்துப் பிழைகள். எழுத்துப் பிழைகளின்றி ஒரு நூலைக் கொண்டு வருவது என்பது பதிப்பகங்களின் தலையாய கடமைகளில் ஒன்று . யாவரும் பதிப்பகம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பதை இங்கு கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும்.

இப்படிச் சில சிறிய குறைகள் சுட்டிக்காட்டும் படியாக இருந்தாலும் ஒரு நிறைவான நூலைப் படித்த திருப்தி கிடைத்தது. உமையாழிடம் நல்ல எழுத்தாற்றல், கற்பனை வளம், ஆழ்ந்து ஆராய்ந்து எழுதும் தன்மை எல்லாமே உள்ளன. நல்ல மொழியாழுமை உள்ளது. புலம் பெயர்ந்த போதும் பெரும்பாலான எம்மவரது எழுத்துக்கள் புலம் பெயராமலேதான் இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே புலம்பெயர் தேசக்கதைகளையும் எழுதியுள்ளார்கள். அந்த வரிசையில் இப்போது உமையாழின் cass, வேரோடி, சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை போன்ற கதைகளும் இடம் பிடித்துள்ளன. உமையாழ் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

சந்திரவதனா
23.06.2020

Drucken   E-Mail

Related Articles

Block Party - Childrens Book

Yaar Manathil Yaar... Chandravathanaa

Manaosai - Shortstory - Chandravathanaa