ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

1972ல் வெளியான 'பொன்னூஞ்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இன்று கேட்டுக்கொண்டிருந்த போது என்னுள் மறக்கமுடியாத பல பழைய ஞாபகங்கள் வந்தன!

எங்கள் வீட்டில் நாதச்சீனையா (வைரவநாதன்) இருந்து படித்துக் கொண்டிருந்த காலம் அது. நாதச்சீனையா 'பிள்ளை' என்று என்னை அன்பு பொழிய அழைப்பார். விடுமுறை நாட்களில் அவரின் நண்பர்கள் பலர் அவரைச் சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டின் முன் அறையில் நாதச்சீனையா இருந்தார். தினகரண்ணா, சிறீ அண்ணா, திருமாள் அண்ணா, நந்தண்ணா, சாந்துக்குஞ்சையா, செல்வக்குஞ்சையா, மனோகரண்ணா....... இப்படியே பட்டியல் நீண்டு கொண்டு போகும்!

இவர்களுள் சிறீ அண்ணா எப்பவும் தன் இதமான புன்னகையால் என்னைக் கவர்ந்திருப்பார். நான் அப்போது சிறுமி. என்னைக் கண்டால் 'கே.ஆர்.விஜயா..' என்று அடைமொழி வைத்து செல்லமாக அழைப்பார். கூச்சத்தில் நெளிந்து சுருண்டு ஓடிமறைந்து விடுவேன்! தேநீர் பரிமாறப்போன சமயங்களில் பல தடவைகள் எக்கச்சக்கமாக அவர் கைகளில் மாட்டுப்பட்டு, நான் ஒரு பாட்டுப் பாடிக் காட்ட வேண்டும் என்ற கட்டளையின் பேரில் அவர் கைப்பிடிக்குள் சிறைப்பட்டிருப்பேன். சில நிமிடங்கள் கழிய தருணம் பார்த்து சிறையை உடைத்துக் கொண்டு ஓடி மறைந்து விடுவேன். பின்னரொரு தரம் பிடிபட்டபோது, தப்ப முடியாத ஒரு தருணத்தில் 'அவர் ஒரு பாட்டுப் பாடினால் மட்டுமே நானும் பாட்டுப்பாடிக் காட்டுவேன்' என்று துணிவாகச் சொல்லி விட்டேன்.

என்ன ஆச்சரியம் ! அவரோ எந்த சாட்டுக்களும் சொல்லாமல், வெகு நிதானமாக, வெகு அழகாக – 'ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா...' என்ற இந்தப் பாடலை வெகு ரசனையோடு பாடி முடித்து விட்டார். எல்லோரும் கை தட்டினார்கள்.

அவர் அப்படி அழகாகப் பாடுவார் என்றெல்லாம் முதலில் எனக்குத் தெரியாது. எனக்கோ நெஞ்சு படபடக்கத் தொடங்கி விட்டது! அந்த லெவலுக்கெல்லாம் என்னால் பாடமுடியுமா என்ற பயத்தில் வயிற்றுக்குள் நோகத் தொடங்கிவிட்டது! அவ்வளவு தான், முழு சக்தியையும் பிரயோகித்து, ஒரே மூச்சில் கைகளைப் பிரித்துக் கொண்டு ஓடி மறைந்து விட்டேன்!

அன்றிலிருந்து என்னைக் காணும் தோறும் 'பாட்டு....' என்று தொடங்குவார். நானும் விழுந்தடித்து ஓடி மறைந்து விடுவேன்.

பின்னர் ஒரு நாள் எண்பதுகளின் நடுப்பகுதியில் ஷெல் அடியும், விமானக்குண்டு மழையும் பொழிந்து கொண்டிருந்த.....ஒரு நாளில், மரணங்கள் மலிந்து கிடந்த ஒரு அசாதாரண வேளையில், ஊரின் நடுவீதியில் வைத்து ஒரு சில விநாடிகள் சனங்களிற்கிடையே கண்டேன்!

அவ்வளவு தான்!

இந்தப் பாடலை எப்போ கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவரின் புன்னகை தவழும் முகமும், என் வேண்டுதலுக்கிணங்கி அவர் குரலில் ஒலித்த பாடலும் தான் ஞாபகத்தில் வருகிறது!

- சந்திரா ரவீந்திரன்

 http://youtu.be/JW0fWIFskG8

 படம்: பொன்னூஞ்சல்
பாடியவர்கள்: TMS+பி.சுசீலா
இசை: MSV
நடிப்பு: சிவாஜி+உஷா நந்தினி


TMS:
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

P.சுசீலா:
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

P.சுசீலா:
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மலற்செண்டு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

TMS:
பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
பால் வண்ணம் பழத் தட்டு பூக்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

சுசீலா:
கண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்

TMS:
பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்

TMS+ சுசீலா:
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா