கடந்து வந்த நமது சினிமா - 1

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத் திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர, இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள், ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள். இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.

இலங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் சிங்களத் திரையுலகில் பிரவேசித்த பல நடிகைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை ருக்மணிதேவியைப் பின்பற்றி 1950களிலும் 1960 ஆரம்ப காலங்களிலும் பல நடிகைகள் சிங்களத் திரையுலகில் பிரவேசித்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக சந்யாகுமாரி, விஜிதா மாலிகா, புளொரிடா ஜயலத், கிளாரிஸ் டீ சில்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

15.01.1923 பிறந்த ருக்மணி தேவி சிங்களத் திரையுலகில் தனது பதிவை ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் பதித்திருக்கின்றார். தனது ஏழு வயதில் நத்தார் பாடல்களை இசைக்கத் தொடங்கிய ருக்மணிதேவி பின்னாளில் பல மேடை நாடகங்களிலும், நாட்டிய நாடகங்களிலும், இசை மேடைகளிலும், சிங்களத் திரைவானிலும் மிகப் பிரகாசமாகப் பரிணமித்திருக்கின்றார். இவர் நடித்த பிரபலமான கடவுணு பொரண்டுவ என்ற மேடை நாடகமே பி.ஏ.ஜயமனே அவாகளால் சிங்ளத் திரையுலகின் முதல் திரைப்படமாக நெறியாளப் பட்டிருந்தது. தனது முப்பது வருட திரையுலக வாழ்க்கையில் ருக்மணி தேவி அவர்கள் ஏறக்குறைய 90 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ருக்மணிதேவி பொப் இசைக்குழுவிலும் பாடி தனது திறமையை அங்கும் பதிந்திருக்கின்றார்.

25.09.1978 இலங்கையின் மாத்தறைப் பகுதியில் உள்ள உயன்வத்தை என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் நடந்த வாகன விபத்தில் இலங்கையின் இராப்பாடி என்று அழைக்கப்பட்ட ருக்மணி தேவி அவர்கள் காலமானார்.

28.09.1978 இல் நீர்கொழும்பு மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றிய பெரும் திரளான அவரது ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பட உலக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நாடக உலகக் கலைஞர்கள் அவரது கலையுலக வாழ்க்கையின் சிறப்புக்கு அத்தாட்சியாக இருந்தார்கள். அவரது மறைவுக்கு அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசா வழங்கிய இரங்கல் உரை ருக்மணி தேவி அவர்கள் கலைக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய பணியைக் காட்டி நிற்கின்றது. இலங்கையின் இராப்பாடி என்று ருக்மணிதேவி இலங்கையில் அழைக்கப்பட்டார். அதுபோல் தென்னகத்தில் சிங்களத்துக் குயில் என்று யாழ்ப்பாணத்து நடிகையான தவமணி தேவி இருந்திருக்கின்றார்.

(இனியும் வரும்)
- மூனா
7.11.2004


கருத்துக்களுக்கு

கடந்து வந்த நமது சினிமா - 1
கடந்து வந்த நமது சினிமா - 2 
கடந்து வந்த நமது சினிமா - 3
கடந்து வந்த நமது சினிமா - 4
கடந்து வந்த நமது சினிமா - 5
கடந்து வந்த நமது சினிமா - 6 

Related Articles